பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் புடீன் சந்திப்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான 19ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீன் இந்தியா வந்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், புடீனை வரவேற்றார். பின்னர் விமானநிலையத்தில் புறப்பட்டு நேராக பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புடீன் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக் கொண்டனர்.
நாளையும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச இருக்கிறார் விளாடிமிர் புடீன். இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு நட்புறவை பல்வேறு துறைகளில் மேம்படுத்துவது, சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வது, கூடங்குளம் அணு உலை உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சு வார்த்தை முடிந்த பிறகு புதிய திட்டங்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. எரிசக்தித்துறை, விமான தாக்குதலை தடுக்கும் S-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெறுவது உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.
நிலவிற்கு மனிதனை அனுப்பி வைக்கும் இந்தியாவின் கனவு திட்டத்திற்கு முன்னோட்டமாக இந்திய விண்வெளி வீரர் ஒருவரை விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மையத்திற்கு ரஷ்யா அனுப்பி வைப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.