வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் இணைக்க கோரி வழக்கு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க கோரிய மனுவுக்கு 3 வாரங்களில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

போலி வாக்காளர்களை களையும் வகையிலும், தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் அட்டை இணைக்கும் வரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாகவும், சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அந்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இது சம்பந்தமாக மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய சட்டம் மற்றும் நிதித் துறையையும், ஆதார் ஆணையத்தையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, மூன்று வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

More News >>