நீர்நிலை ஆக்கிரமிப்பு- 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தொடர்பாக மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் அக்டோபர் 11 ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். " மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது."

"நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை.இதனால் மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.மதுரை மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீர்யின்றி பாலைவனமாக மாறிவிடும்."

"நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்,மேலும் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களால் நீர் நிலத்தடிற்குள் செல்லாமல் நீரோட்டம் தடைபடுகிறது."

எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜா,கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் பெரும்பாலான கண்மாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர் வழக்கறிஞர் கூறினார்.

அப்போது பேசிய நீதிபதி, "மதுரையில் திருப்பரங்குன்றம், மேலமடை,தென்கரை,விளாச்சேரி,செல்லூர், ஆத்திகுளம்,தத்தனேரி,அனுப்பானடி உள்ளிட்ட 10 கண்மாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளது என உறுதி செய்யபட்டது." எனக் கூறினார்.

"மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் அக்டோபர் 11 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராக வேண்டும்.  காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர்,பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் தலைமையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More News >>