தனியார் பள்ளிகளுக்கு பள்ளிகல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

11ஆம் வகுப்பு பாடங்களை சரியாக நடத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களை, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுடன் இணைத்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என முதலில் அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் மாற்றி, மதிப்பெண்கள் இணைக்கப்படாது எனவும், மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதனால், தனியார் பள்ளிகளில் மீண்டும் 11ஆம் வகுப்பிற்கான முக்கியத்துவத்தை குறைத்து, 12ஆம் வகுப்பு மற்றும் உயர்கல்விக்கான பயிற்சிகளில் கவனம் செலுத்துவதாக, கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடங்களை முறையாக நடத்துவதில்லை என புகார்கள் வந்துள்ளன. அனைத்துப் பள்ளிகளும், 11ஆம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நடத்த வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More News >>