ஸ்டெர்லைட் ஆய்வு குழு கூட்டம்- தலைவர்கள் பங்கேற்பு

பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட ஸ்டெர்லைட் ஆய்வு குழு 2ஆம் கட்டமாக அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை குறித்து விசாரணை நடத்தி ஆறு வாரத்திற்குள் அறிக்கை அமைக்க மேகாலயா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தூத்துக்குடி வந்த இந்த குழு, 2 நாட்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தது. பின்னர் ஸ்டெர்லைட் வழக்கில் எதிர்மனுதாரர்களாகவும், இடையீட்டு மனுதாரர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும் நேரில் வந்து ஆவணங்களை, கருத்துக்களை அளிக்கலாம் என தெரிவித்தது.

அந்த வரிசையில், சென்னை கலமஹாலில், இன்று ஸ்டெர்லைட் ஆய்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் அப்துல் சலீம், தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா, வணிகர் சங்கம் ராஜா மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் இன்று தங்கள் தரப்பு மனுக்களை அளித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோர மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தரப்பில் மூவர் குழுவிடம் மனு அளித்துள்ளனர்.மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் ஆகியோரும் மனு அளிக்க வந்துள்ளனர்.

More News >>