பிரித்வி ஷா, கோலி, ஜடேஜா சதம் மிரண்டு போன மேற்கிந்திய அணி!

ராஜ்கோட் டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், மேற்கிந்திய அணி 29 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து  94 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை துவங்கவுள்ளது.  

முதல் நாள் டெஸ்ட் ஆட்டத்தில், அறிமுக வீரரான பிரித்வி ஷா(134) அபார சதம் விளாசினார். நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில், கேப்டன் விராட் கோலி(139) மற்றும் முதன்முறையாக ரவீந்திர ஜடேஜா(100) அடித்த சதம் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. மேலும், புஜாரா(86), ரிஷப் பந்த்(92) ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அடுத்து மேற்கிந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கிரேக் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரில் பிராத்வைட்டையும், 5-வது ஓவரில் பொவேலையும் முகமது ஷமி அடுத்தடுத்து வெளியேற்றினார்.

அதன்பின் வந்த ஷாய் ஹோப் 10 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் க்ளீன் போல்டானார். ஷிம்ரோன் ஹெட்மையர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சுனில் அம்ப்ரிஸ் 12 ரன்கள் எடுத்த நிலையில ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ் உடன் கீமோ பால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் அந்த அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 94 ரன்களுடன் இன்று களமிறங்குகிறது.

சொர்ப்ப ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கிந்திய அணி இழந்துவிட்டால், இந்தியா இந்த முதல் டெஸ்டை அபாரமாக வென்றுவிடும்.

இந்த ஆண்டில் மட்டும் கேப்டன் விராட் கோலி 17 இன்னிங்ஸில் 1018 ரன்கள் கடந்து உலக அரங்கில் முதலிடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி அடித்த 24வது டெஸ்ட் சதம் இதுவாகும். மேலும், கேப்டனாக 17வது டெஸ்ட் சதத்தை நேற்றைய போட்டியில் கோலி அடித்துள்ளார். 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த ஜடேஜாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News >>