நீண்ட நாட்களுக்கு பிறகு பாராட்டு மழையில் நனையும் த்ரிஷா!

96 படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் த்ரிஷா.

கடைசியாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்காக பல விருதுகளையும் பாராட்டுக்களையும் நடிகை த்ரிஷா பெற்றதாக நினைவுக்கு வருகிறது. திரையுலகில் த்ரிஷா 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு 96 திரைப்படம் சிகப்பு கம்பள வரவேற்பை அளித்துள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் நேற்று வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் காதலையும், மீண்டும் சந்திக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளையும் திரையில் தேனாக இயக்குநர் தூவியுள்ளார். இதில், சிறப்பான நடிப்பை த்ரிஷா வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், படத்தை பார்த்த நடிகை குஷ்பு, விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல பிரபலங்கள் போனிலும், டுவிட்டரில் த்ரிஷாவை வாழ்த்தி வருகின்றனர். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்படி ஒரு வாழ்த்து மழையில் த்ரிஷா நனைவது குறிப்பிடத்தக்கது.

மறுபடியும் நாயகி, மோகினி போன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்பதே எவர்க்ரீன் த்ரிஷா ரசிகர் மன்றத்தின் கோரிக்கையாக இருக்கும்!

More News >>