பரியேறும் பெருமாள் படம் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. அவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாளும்' அடங்கும்.

சமூகத்தில் புரையோடிகிடக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளை 'பரியேறும் பெருமாள்' தோலுரித்து காட்டியுள்ளது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு திரைத்துறை பிரபலங்களின் பாராட்டையும் பெற்று வருகிறது. கமல், சிவக்குமார் ஆகியோர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில் திமுக தலைவர் ஸ்டாலின், மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகன் கிருத்திகா ஆகியோர் இணைந்து பரியேறும் பெருமாள் படத்தை பார்த்தனர். அவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா படத்தை கண்டு களித்தனர்.

படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார். பின்னர் பேசிய அவர், "தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம். திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" எனக் கூறினார்.

நிகழ்காலத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை தமிழ் சினிமாக்கள் படம்பிடித்து காட்டுவது வரவேற்கதக்கது தான். சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம், சீமராஜா விவசாயிகள் பிரச்சினையை பேசியது. அதேபோல், காலா, பரியேறும் பெருமாள் உள்பட குறிப்பிட்ட சில படங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வெடித்தெழும் குரலாக உள்ளது. இது போன்று தமிழ் சினிமாவில் ஒரு நல்ல டிரெண்ட் உருவாகி வருவது ஆரோக்கியமான விஷயம் தான்.

More News >>