கனமழை... எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்டம் ஆயத்தம்

வெள்ள அபாயம் நேரிட்டால் பொதுமக்கள் உதவி கோருவதற்கான தொடர்பு எண்களை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பருவமழையை எதிர்கொள்ளுவதற்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், வெள்ளம் ஏற்பட்டால் ஆற்ற வேண்டிய நிவாரண பணிகள் மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நிவாரண பணிகளுக்காக திருவள்ளூர் மாவட்டம் எட்டு வட்டங்கள் மற்றும் 48 பகுதிகளாக பிரித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 22 மண்டல குழுக்கள், இரவு பகல் முழுவதும் பணியாற்றும் 64 உதவிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 660 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ள அபாயம் ஏற்பட்டால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் 044-27664177, 044-27666746, 044-27665248 என்ற தொலைபேசி எண்களிலும் பொன்னேரி பகுதியில் வசிப்போர் 9444317863, திருவள்ளூர் பகுதியில் வசிப்போர் 9444317862 ஆகிய வாட்ஸ் அப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வெள்ள அபாயம் நேரக்கூடிய பகுதிகளாக அறியப்பட்டுள்ள பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டங்கள் தொடர்கண்காணிப்பில் இருப்பதாகவும், நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க மணல் மூட்டைகள் ஆயத்தமாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>