விமர்சனம்: நோ சொல்லாமல் நோட்டாவுக்கு ஓட்டு போடலாம்!

அர்ஜுன் ரெட்டி எனும் சிறிய பட்ஜெட் படத்தை 100 கோடி ரூபாய் பிளாக் பஸ்டர் படமாக்கிய விஜயதேவரகொண்டாவின் நோட்டா படம் நெத்தியடி அரசியல் படமாக அமைந்துள்ளது.

தமிழுக்கு வரவேற்கிறோம் விஜய்தேவரகொண்ட, ஆணழகனாக வலம் வரும் இவர் ஆழமான நடிகனாகவும் அசத்துகிறார். தமிழ் மொழிக்கு டப்பிங் வைக்காமல், முயற்சி மற்றும் பயிற்சியால், நன்றாகவே தமிழ் வசனங்களை பேசி அசத்துகிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல அரசியல் படத்தை பார்த்த அனுபவம் நோட்டா படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாடு கரன்ட் பாலிடிக்ஸ் முதல், இந்தியாவின் மிக முக்கிய அரசியல் களங்களை காட்சிப் படுத்திய விதத்தில் இருமுகன் ஆனந்த் ஷங்கர் இயக்குநர் ஷங்கரை நினைவு படுத்துகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட நோட்டா படம், சாமர்த்தியமான திரைக்கதையின் மூலம் இரு மாநில ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த வாரம் தொடர்ந்து 96, ராட்சசன், நோட்டா என மூன்று நல்ல படங்கள் வெவ்வேறு ஜானரில் ரிலீசாகியுள்ளதால், ரசிகர்களின் நோட்டாவை கடைசியாக கண்டு கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

நோட்டாவின் கதை தான் என்ன?

தமிழக முதலமைச்சராக இருக்கும் நாசர், தன் மீது பாயவுள்ள வழக்கிற்காக, ஒரு நாள் சிஎம் மாதிரி, இரண்டு வாரங்களுக்கு தனது உல்லாச மகன் விஜய் தேவரகொண்டாவை டம்மி சிஎம் ஆக மாற்றுகிறார்.

இரண்டு வாரத்தில் கேஸ் சாதகமாகிவிடும் என்ற கணக்கு தப்பாய் போக, ஐந்து ஆண்டுகள் சிறை செல்கிறார் நாசர். இனி ஐந்து ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக நீடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் செல்கிறார்.

உல்லாச வாழ்க்கை வாழும் விஜய், பத்திரிகையாளர் சத்தியராஜின் உதவியால், எப்படி நல்ல முதல்வராக மாறுகிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை சுற்றி ஆடும் அரசியல் சதுரங்க ஆட்டமாக நோட்டா கிளாப்ஸ் அள்ளுகிறது.

கோலிவுட்டின் இளம் நடிகர்களுக்கு ஒரு நல்ல சவாலாக விஜய் தேவரகொண்டா மாற அதிக வாய்ப்புள்ளது. எதிர்கட்சி தலைவரின் வாரிசாக வரும் சஞ்சனா சரவெடியாய் நடித்துள்ளார். ஹீரோயின் மெஹ்ரீனை விட சஞ்சனா தான் கதையில் ஹீரோயினாக தெரிகிறார். அரசியல் விசுவாசியாக எம்.எஸ். பாஸ்கர் தனக்கே உரிய பாணியில் கலக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இரண்டு துள்ளல் பாடல்களை மட்டும் போட்டுவிட்டு, கதைக்கு வலுவாக பின்னணியில் கூடுதல் கவனம் சேர்த்திருப்பது பாராட்டுக்கு உரியது.

மொத்தத்தில் நோட்டா ஆட்சியாளர்களுக்கு ஒரு வேட்டா அமைந்துள்ளது.

நோட்டா ரேட்டிங்: 2.75/5.

More News >>