காவிரியில் மணல் குவாரி அமைக்க தடை கோரி வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி நதிக்கரையில் மணல் குவாரி அமைக்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சர்க்கார் மணப்பள்ளி கிராமத்தில் காவிரி நதிக்கரையில் மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்தது. இந்த மணல் குவாரி அமைப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்தது.

இந்த மணல் குவாரிக்கு தடை விதிக்க கோரி அந்த கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். மனுவில், "மணல் குவாரி அமைய உள்ள இடத்துக்கு அருகில் வனப்பகுதி இல்லை.மயானம் இல்லை. மணல் கொண்டு செல்வதால் மக்களுக்கு பாதிப்பில்லை என பொய்யான தகவல்களை தெரிவித்து சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது."

இந்த மனு, நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வகையில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றனர்.

மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர், வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More News >>