அதி தீவிர கனமழை அறிவிப்பு வாபஸ்- வானிலை
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7ஆம் தேதியான நாளை, இந்த மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது. இதையடுத்து ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு, மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டதால் அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அதி தீவிர கனமழை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அது ஏமன் பகுதியை நோக்கி நகர்கிறது. எனவே, தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இரு தினங்கள் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தமிழக மீனவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.