பெட்ரோல் விலை குறைப்பு: மத்திய அரசின் மோசடி நாடகம்- திருமாவளவன்
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது மத்திய அரசின் மோசடி நாடகம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெட்ரோல், டீசல் விலையில் 2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அதில் 1.50 மத்திய கலால் வரியில் குறைப்பதாகவும், மீதமுள்ள ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமாறும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம். மத்திய பாஜக அரசு கலால் வரியை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு முன்வர வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 ரூபாய் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு தனது பங்கிலிருந்து 1.50 குறைப்பதாக சொல்வது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆடப்படும் மோசடி நாடகம்.
பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் கொள்கையைக் கைவிட்டு சர்வதேச விலைக்கு ஏற்றபடி அவ்வப்போது அரசாங்கமே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.