2018ல் பிரிட்டன், பிரான்சை பின்னுக்குத் தள்ளும் இந்தியப் பொருளாதாரம்

லண்டனை மையமாகக் கொண்டு செயல்படும் பொருளாதாரம் மற்றும் வணிக ஆய்வக மையம் சமீபத்தில் உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், வரும் 2018ம் ஆண்டில் இந்தியா உலகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணும் எனவும், தற்போது ஏழாவது இடத்தில் இருக்கும் இந்தியா அடுத்த ஆண்டில் பிரிட்டன் மற்றும் பிரான்சை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்தை பிடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில், இந்தியா 2032ம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார நிலையில் மூன்றாவது இடம் வகிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வரி மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவில் நடப்பு நிதியாண்டின் முதல் கால் இறுதியில் அதாவது ஜூன் மாதம் வரையில் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைக் கண்டது. இதனால், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலிறுதியில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது.

இதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலிறுதி ஆண்டில் சிறிது முன்னேற்றத்துடன் 6.3 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மையத்தின் துணை தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் கூறுகையில், “இந்தியாவின் தற்போதைய பொளாதார வீழ்ச்சி தற்காலிகமானதே. 2018ல், பிரிட்டன் மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளி உலக நாடுகளிலேயே இந்தியா ஐந்தாவது இடத்தை பிடிக்கும் ” என்றார்.

இதற்கிடையே, உலகின் மிகப் பெரிய பொருளாதார நிலையில் தொடர்ந்து இரண்டாம் நிலை வகித்து வரும் சீனா, வரும் 2032ம் ஆண்டில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடிக்கும் எனவும், அந்த காலக்கட்டத்தில் இந்தியா உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடிக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>