ரன்வீர்ஷா சொந்தமான இடங்களில் தோண்ட தோண்ட கிடைக்கும் சிலைகள்
சென்னை போயஸ்தோட்டத்தில் 2-வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் வீட்டின் சுவர்களை இடித்தும், சுற்றுபுற இடத்தை தோண்டியும் சிலைகளை மீட்டனர்.
சைதாப்பேட்டை, மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரன்வீர்ஷாவின் நண்பர் இல்லத்தில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆறு கற்சிலைகள் மீட்கப்பட்டன.
வீட்டின் பக்கவாட்டு, முன்புற சுவரை இடித்து சிலைகளை வெளியே எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். ரன்வீர்ஷா சொந்தமான இடத்தில் இதுவரை நடந்த சோதனையில் 230 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் தோண்ட தோண்ட சிலைகள் வந்து கொண்டே இருப்பதால், மேலும் விசாரணையை தீவிரப்படுத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.