திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் இல்லை ?
திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் ஆகஸ்ட் 2ஆம் தேதியும், முன்னாள் திமுக தலைவரும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாநிதி ஆகஸ்ட் 7ஆம் தேதியும் காலமானார்கள். இதனை தொடர்ந்து, அந்த இரு தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த இரு தொகுதி இடைத்தேர்தலில் தங்களது பலத்தை காட்ட அதிமுக, திமுக, அமமுக, அழகிரி இடையே போட்டா போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, தற்போது இருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. சைக்கிள் பேரணி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் மக்களிடையே வாக்குகளையும் அதிமுக சேகரித்து வருகிறது. இந்த நான்கு தரப்பினரும் இரு தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தின் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான தேதி தற்போது அறிவிக்க இயலாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மழைக்காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி கடிதம் எழுதியதாகவும், அவரது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலுக்கான தேதியை இப்போது அறிவிக்க இயலாது எனவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.