சபரிமலை தீர்ப்பு எதிரொலி: சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பக்தர்கள் போராட்டம்
சபரிமலை ஐய்யப்பன் கோவலில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, சென்னை, டெல்லி, பெங்களூரு நகரங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை செல்ல இளம்பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால், இதுதொடர்பாக தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு பெண்களே எதிர்ப்பு தெரிவித்து வருவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஐய்யப்ப நம ஜப யாத்ரா என்று ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தீர்ப்புக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் வெள்ளை நிற சேலை அணிந்து தீர்ப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல், பெங்களூருவிலும் பெரும்பாலான மக்கள் சபரிமலையை காப்பாற்றுங்கள் என்று பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை நுங்கம்பாக்கம் - மகாபலிபுரம் சாலையிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, பெரும்பாலானவர்கள் கையில் தீபங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.