ஆளுங்கட்சிக்கு ஊதுகுழலாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி
திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை மழையை காரணம் காட்டி அறிவிக்கப்படாமல் இருப்பது, ஆளுங்கட்சிக்கு ஊதுகுழலாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற கேள்வி எழும்புகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய, மாநில ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக தேர்தல் ஆணையம் மாறுகிறதோ என சந்தேகம் எழுகிறது. ஆளும் கட்சிக்கு தோல்வி நிச்சயம் என்பதால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற எண்ணம் தமிழக மக்கள் மனதில் எழுகிறது.
பொதுமக்களின் சந்தேகத்தை நீக்கும் வகையில் 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும். பருவ மழையைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைப்பது நியாயமாகத் தெரியவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மழைக்காலத்தை ஒட்டிய டிசம்பரில்தான் நடத்தப்பட்டது.
ஜெயலலிதா சிகிச்சைப்பெற்ற போது நடைபெற்ற இடைத்தேர்தல்கள் பருவமாழைக் காலத்தில்தான் நடந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் மழைக்காலத்தில் நடத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.