மக்களவை தேர்தல்- சரத் பவார் அதிரடி முடிவு

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற மக்களவை பொது தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சியின் பிரமுகர் அஜித் பவார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரான சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார். இந்திய அளவில் பிரபலமான தலைவரான இவர், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் பிரமுகர்களில் ஒருவரான அஜித் பவார் கூறியுள்ளார்.

"தனது பெயரை எந்தத் தொகுதியின் சார்பிலும் முன்மொழியக்கூடாது என்று தலைவர் சரத் பவார் விரும்புகிறார். அவருக்கு தற்போது 78 வயதாகிவிட்டது. மக்களவை தேர்தலில் எந்தத் தொகுதியிலும் தாம் போட்டியிடக்கூடாது என்று நினைக்கிறார்.

பூனாவில் சில தொண்டர்கள் சரத் பவார் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர். அவர்களிடம் அவர் உறுதியாக மறுத்துவிட்டார்" என்று மும்பையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசும்போது அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 48 மக்களவை தொகுதிகளை பாதிக்கு பாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்று காங்கிரஸூடன் தேசியவாத காங்கிரஸ் பேசி வருகிறது. 2014ம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிட்டன. வரும் தேர்தலுக்காக இரண்டு கட்சிகளுமே தனித்தனியாக பரப்புரையை ஆரம்பித்து விட்டன.

இன்னும் ஒரு மாதத்திற்குள் கூட்டணி குறித்து முடிவாகி விடுமென மஹாராஷ்டிர காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸூடன் தொகுதி பங்கீடு குறித்த அடுத்தக் கட்ட பேச்சு அக்டோபர் 12ம் தேதி நடக்க இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினர் ஜிதேந்திர அஹ்வத், "அஜித் பவாரின் மகன் பார்த் பவார் மாவல் மக்களவை தொகுதிக்குப் போட்டியிடுவதை கட்சி தலைமை எதிர்க்கவில்லை. ஆனால், தொண்டர்களிடம் கலந்து பேசி வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்படும்," என்று கூறியுள்ளார்.

More News >>