காஷ்மீரில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
காஷ்மீர் மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 1145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, இன்று ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட 149 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்களுக்காக 584 வாக்குச்சாடவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலையட்டி, ஜம்மு மாவட்டத்துக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. இது மாலை 4 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில், அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதால், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 26 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளர்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சறுத்தல் உள்ளதால், அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.