ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டதா? - சந்தேகம் கிளப்பும் ஆனந்த்ராஜ்
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவதாக எடுக்கப்பட்ட வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் உள்ளது என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்ற டிசம்பர் 21-ம் தேதிக்கு முந்தைய நால் அன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார்.
அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த சந்தேகத்திற்கு ஓரளவு தீர்க்கப்பட்டாலும் இந்த வீடியோ குறித்து பலரும் பல்வேறுவிதமான ஐயங்களை கேள்வி எழுப்பி இருந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வீடியோ குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர் நடிகர் ஆனந்த்ராஜ் கூறும்போது, “நாங்கள் சினிமாவில் இருக்கிறோம். ஒரு வீடியோ உண்மையில் எடுக்கப்பட்டதா அல்லது மாஃபிங் செய்யப்பட்டதாக என்பது நன்றாக தெரியும்.
ஒரு வீடியோ சதாரணமாக எடுத்தாலும் தேதி, நேரம், காலம் எல்லாம் அதில் இருக்கும். இந்த தகவல்கள் எல்லாம் இல்லாத ஒரு வீடியோவை ஏன் வெளியிட வேண்டும்?
போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ வரை பல்வேறு வீடுகளில், தெருக்களில் வீடியோ காமிராக்கள் இருந்திருக்கும். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்திருக்கும். இதில் இருந்து எந்தவொரு வீடியோவையும் வெளியிடாமல் சந்தேகத்திற்கிடமான வீடியோவை எதற்கு வெளியிட வேண்டும்.
உடலில் துணி விலகி இருப்பதை கூட சரி செய்யாத வீடியோவை எதற்கு வெளியிட வேண்டும். இந்த வீடியோ போயஸ் இல்லத்தில் எடுக்கப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. வீடியோவின் ஜன்னலில் தோன்றும் பார்ம் மரம் போயஸ் இல்லத்தில் உள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.