புரட்டாசி மகாளய அமாவாசை- நீர்நிலைகளில் திரளும் மக்கள்
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் மிகவும் புனிதமாக கருதப்படும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்துக்கள், மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து தங்களது முன்னோர்கள் நினைவாக வழிபாடு நடத்துவது வழக்கம். அவற்றில் ஆடி, புரட்டாசி, தை மற்றும் மாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் சிறப்பானதாகும்.
இந்த நாட்களில் நாடு முழுவதும் உள்ள குளங்கள், ஆறுகள், நதிகள் மற்றும் கடல்களில் மக்கள் புனித நீராடி, இறந்துபோன தங்கள் முன்னோர் நினைவாக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வழிபடுவர்.
இன்று புரட்டாசி மகாளய அமாவாசையொட்டி, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் திரண்ட பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். ராமேஸ்வம் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், அக்னிதீர்த்த கடலில் புனித நீராடினர்.
அதன்பின் கடற்கரையில் அமர்ந்து, தங்கள் குடும்பத்தின் நலனுக்காக சங்கல்ப பூஜையும், அதனை தொடர்ந்து இறந்துபோன தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
அதன் பின்னர் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து, அமாவாசை விரதத்தை முடித்தனர். பக்தர்கள் நலன் கருதி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம், திருச்சி காவிரிக்கரை உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் திரண்ட மக்கள், முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து, சாமி தரிசனம் செய்தனர்.
இன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழிலில் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும் என்பது மக்களின் நம்பிக்கை.