ஃபேஸ்புக் ஹேக் சம்பவம் 1000 கோடி அபராதம்?
பேஸ்புக் நிறுவனம் 5 கோடி பயனர்களின் கணக்குகளை கையாளக்கூடிய டிஜிட்டல் லாகின் கோட்களை ஹேக்கர்கள் திருடிவிட்டதாக அந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இது பேஸ்புக்கின் மோசமான பாதுகாப்பு அம்ச பாதிப்பாக கருதப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் ஹேக் விவகாரம் மிகவும் மோசமான ஒன்று. தலைமைச் செயல் அதிகாரி ஷெர்ல் சாண்ட்பெர்க் பேஸ்புக் கணக்குடன் தனது கணக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக பேஸ்புக்கின் பங்குகள் 2.6% சரிவைச் சந்தித்துள்ளன. மேலும் #deleteFacebook என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் முழக்கங்களும் பரவிவந்தது.
5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹேக்கர்கள் ஊடுருவிய 5 கோடி கணக்குகளை மீண்டும் லாகின் செய்ய அறிவுறுத்திய ஃபேஸ்புக் கடவுச் சொல்லை மாற்றத் தேவையில்லை என அறிவித்துள்ளது.
பயனாளர்களிடம் தகவல்கள் திருடப்படவில்லை என்றும் பாதுகாப்பு குறைபாடை சரிசெய்துவிட்டதாகவும் ஃபேஸ்புக் கூறியிருந்தாலும் புதிய ஐரோப்பிய டேட்டா சட்டங்களின்படி அந்த நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.