தமிழகத்தில் வானிலை மையம் கூட அரசியல் செய்கிறதா? தினகரன்
தமிழக இடைதேர்தலுக்கு தேதி அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது எனவும் திருப்பரங்குன்றத்தில் மழைக்காலத்தில் ஏற்கனவே இடைத் தேர்தல் நடந்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றத்தில் இதற்கு முன்பாக நவம்பர் மாதத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்றது. எனவே மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைத்திருப்பது என்பது சரியான நடைமுறை கிடையாது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் நடந்தால் அதிமுக படு தோல்வி அடையும். அதனால் தான் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கும்.
இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் அச்சப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று ஏற்கனவே வழக்கு தொடுத்த ஸ்டாலின் இப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். என்று தெரிவித்தார் டிடிவி தினகரன்.
மத்திய பிரதேசம், ஜார்கண்ட் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அப்போது தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் வானிலை நிலை காரணமாக தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.