நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு முன் ஜாமின்!
மத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடந்த விழாவில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார்.
இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அவர் மீது வழக்கு பதிய கோரி இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மீது மத உணர்வு புண்படுத்தியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி முன் ஜாமின் கேட்டு, சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான வழக்கில், எந்த விசாரணையும் நடத்தவில்லை எனக் கூறி, விரைந்து விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், வழக்கை விசாரிக்க விரைந்து விசாரித்து, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிட்டார்.