பிரதமர் மோடியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை நினைவுகூறும் வகையில், தமிழக அமைச்சரவை பரிந்துரையை ஏற்று, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டும். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும். சென்னை மாநகரில் நிரந்தர வெள்ள தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் சுமார் ரூ.4,445 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

2017-18 ஆம் ஆண்டிற்கான ஐஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 5,426 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும். கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்க திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. ரூ.17,600 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காவேரி நீர் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வு திட்டத்திற்கு உரிய அனுமதியும், நிதியும் வழங்க வேண்டும்.

புயலினால் காணாமல் போகும் மீனவர்களை தேடி, மீட்டுவர ஏதுவாக, கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய ஒரு புதிய நிரந்தர கப்பல் படை தளம் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களின்கீழ் வர வேண்டிய ரூ. 8,699 கோடி மத்திய அரசின் பங்குத் தொகையை விடுவிக்கவேண்டும்.

சேலம் உருக்காலையில் பயன்படுத்தாமல் உள்ள காலி நிலத்தில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும். உடான் திட்டத்தின் கீழ், ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்திற்கு விமான போக்குவரத்து சேவையினை செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் உடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "பெட்ரோல், டீசல் விலை குறைப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் எனக் கூறினார். ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் தமிழகத்திற்குள் ஒரு போதும் அனுமதிக்கப்படாது" என உறுதி அளித்தார்.

More News >>