பெங்களூரில் பன்றிக்காய்ச்சல்: ஒரே வாரத்தில் 50 பேருக்கு பாதிப்பு

பெங்களூருவில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கி உள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெங்களூருவில் மஹாதேவபுரம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் எச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில், பன்றிக்காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், பன்றிக்காய்ச்சலுக்கு அறிகுறியாக சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட தொற்று நோய் பாதிப்பால் ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

பன்றிக்காய்ச்சல் கேரளாவில் இருந்து தான் பரவி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, சமீபத்தில் கேரளாவை புரட்டிப்பேட்ட பேய் மழையின் போது உதவுவதற்காக பெங்களூருவில் இருந்து ஏராளமானோர் சென்று திரும்பினர். அப்போது, அவர்கள் மூலம் பன்றிக்காய்ச்சல் தொற்று பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை பலி எண்ணிக்கை இல்லை என்றாலும், பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், பெங்களூருவில் மட்டுமின்றி, பெங்களூருவுக்கு சென்று வரும் தமிழக மக்களிடையேயும் அச்சம் நிலவி வருகிறது.

பன்றிக்காய்ச்சல் குறித்து தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ள கர்நாடக அரசு, தொற்று நோயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

More News >>