கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு
முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்தது.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா, மராட்டியம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 75 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில், 44 திமுக உறுப்பினர்கள் மற்றும் 28 அதிமுக உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் எம்.எல்.ஏக்கள் மீது இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்குகள் அனைத்தையும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்றைய தினம் மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் மரணமடைந்ததால் அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் முறையிடப்பட்டு, அவரது இறப்பு சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிபதி, கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார்.