பேராண்மை ஷூட்டிங்கில் அட்டைகள் கடிக்காமல் இருக்க இந்த இலையை தேய்த்தோம் - எஸ்.பி.ஜனநாதன்
பேராண்மை படத்தின்போது அட்டை கடிக்காமல் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் இலையைத் தேய்த்துக் கொண்டோம் என்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் நடைபெற்று வரும் இரண்டாவது செங்கை புத்தகத் திருவிழாவில் புதனன்று (டிச 27) நடைபெற்ற கருத்தரங்கில் இயக்குநர் ஜனநாதன் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “பத்தாம் வகுப்புவரை படித்துள்ள நான் தோழர்கள் கொடுத்த புத்தகங்களையும், இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களில் புத்தகம் வாங்கிப் படித்தும் தான் என்னை மேன்மைப் படுத்திக்கொண்டேன்.
சினிமாவை அறிஞர்கள் பயன்படுத்திட வேண்டும், பேராண்மை படத்தில் வரும் உபரி மதிப்பு குறித்த ஒரு காட்சி ஒருநாள் முழுவதும் படமாக்கப்பட்டது. பின்னர் அந்த காட்சியை தயாரிப்பாளர் படத்தில் வைக்க வேண்டாம் என்றார்.
ஏன் என்று கேட்டதற்கு வகுப்பறையை கட்டடித்து விட்டுத்தான் படத்திற்கு வருகின்றனர். இங்கும் வகுப்பு எடுத்தால் எப்படி என்று கேட்டார். நான் அதற்கு திரையரங்கை வகுப்பறையாக மாற்ற வேண்டும் என்று கூறி அந்த காட்சியை படத்தில் வைத்தேன். அந்த காட்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
பேராண்மை படத்தில் அடர்ந்த காட்டிற்குள் படம் எடுத்தபோது மனித வாடைக்கு ஆயிரக்கணக்கான அட்டைகள் வந்து எங்களை கடித்தது. அட்டை கடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் கேட்டபோது ஒரு இலை உள்ளது. அந்த இலையை தேய்த்துக்கொண்டால் அட்டை கடிக்காது என்றனர்.
அந்த இலையின் பெயரை கேட்டபோது இலையின் பெயர் கம்யூனிஸ்ட் இலை என்று கூறினர். நாங்கள் கம்யூனிஸ்ட் இலைகளை அதிகமாக பயன்படுத்திக் கொண்டோம்” என்று தெரிவித்தார்.