நக்கீரன் கோபால் கைதுக்கு வைகோ கண்டனம்!

ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்தாகக் கூறி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அளித்த புகாரின் அடிப்படையில், நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, நக்கீரன் கோபால் கைதுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைய நிலவுகிறதோ.

நக்கீரன் கோபால் கருத்து, எழுத்து சுதந்திரத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். புனே செல்ல சோதனை முடித்து விமானத்தில் செல்ல காத்திருந்தபோது போலீஸார் கைது செய்துள்ளனர்"

"ஆளுநர் மாளிகையில் இருந்து பன்வாரிலால் புரோகித் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டதாக அறிகிறேன். இது பத்திரிகை, ஊடகங்களுக்கு விடப்பட்ட மிரட்டல் நடவடிக்கை. இது போன்ற சர்வாதிகார பாசிச போக்கை எதிர்கொள்ளகின்ற துணிச்சலை பெற்றவர் தான் நக்கீரன் கோபால். அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சிகளை மிரட்டும் வகையில் ஆளுனர் மாளிகை உத்தரவு வேகமாக பாய்ந்து உள்ளது."

"அரசையும் காவல்துறையையும் பகடையாக ஏவ ஆளுநர் நினைக்கிறார். இந்த கைது என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். நெருக்கடி நிலையை கண்டவர்கள், இதை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். உடனடியாக நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

More News >>