மறதி நோயால் அலைந்து திரிந்த முதியவர்: உதவிய மாவட்ட ஆட்சியர்

அம்னீஷியா என்னும் நினைவு மறதி நோயால் பாதிக்கப்பட்ட வடநாட்டு முதியவர் ஒருவர், திருவண்ணாமலையில் அலைந்து திரிந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முயற்சியெடுத்து அவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தார்.

செப்டம்பர் 28ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நடத்தியுள்ளார். அப்போது லுங்கி மட்டும் அணிந்த முதியவர் ஒருவர் ஊன்றுகோலுடன் அலைந்து திரிவதை பார்த்துள்ளார். அம்முதியவருக்குத் தமிழ் தெரியவில்லை. ஆனால், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளை மற்றும் புரிந்து கொள்ள முடிந்தது.

அம்முதியவரை தம் அலுவலகத்திற்கு அழைத்து வந்த ஆட்சியர் கந்தசாமி, அவருக்கு உணவும் மாற்று உடையும் அளித்தார். வருவாய், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் பெரும்முயற்சிக்குப் பிறகு அவரது பெயர் அலோசியஸ் பர்னபாஸ் தோப்பு என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

ஜார்க்கண்ட் மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முதியவரின் மகன் அனில் என்பவரை கண்டுபிடித்தனர். தம் தகப்பனார் அம்னீஷியா என்னும் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அந்நோயின் தாக்கத்தால் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போய்விட்டார் என்றும் தெரிவித்தார்.

அனில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கு பயண ஏற்பாட்டினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தார். தம் தந்தையை மீட்டு சேர்த்து வைத்ததற்காக அனில், கடந்த சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு நன்றி தெரிவித்தார். இருவரும் தம் சொந்த ஊருக்குச் செல்வதற்கும் கந்தசாமி ஏற்பாடுகளை செய்தார்.

More News >>