ஆதார் கார்டு இல்லாததால் சிகிச்சை மறுப்பு: ராணுவ வீரரின் மனைவி பலி

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமண தாஸ். இவர் கார்கில் போரில் உயிர் இழந்தார். இதன்பிறகு இவரது மனைவி சகுந்தலா மற்றும் மகன் பவன்குமார் அரியானாவில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சகுந்தலா கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதன்பின்னர், பவன்குமார் சோனிபட் ராணுவ அலுவலகத்தை அணுகினார். அங்கிருந்த உயர் அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அதனை ஏற்று பவன் குமார் தனது தாய் சகுந்தலாவை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்க சகுந்தலாவின் ஆதார் அட்டை கட்டாயம் தேவை என நிர்வாகம் கேட்டுள்ளது. அதனால், பவன்குமார் தனது செல் போனில் உள்ள தனது தாயின் ஆதார் கார்டு நகலை காட்டியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஆதார் எண் சரியாக தெரியவில்லை என்பதால், அசல் ஆதார் அட்டையை எடுத்துவரும்படி கேட்டுள்ளனர். மேலும், அசல் ஆதார் அட்டையை காட்டாததால் சகுந்தலாவை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதனால், மனமுடைந்த பவன்குமார் அருகில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தார். ஆனால் அந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சகுந்தலாவின் உயிர் பிரிந்தது.இதுகுறித்து பவன்குமார் சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் மீது புகார் தெரிவித்தார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையை நிர்வாகம் கூறுகையில்," சிகிச்சை பெற ஆதார் எண்னை வாங்குவது நோயாளியின் விவரங்களை சேமித்து வைக்கவே தவிர சிகிச்சைக்காக இல்லை என்றும், ஆதார் கார்டு இல்லை என்றாலும் சிகிச்சை அளிப்போம்" என விளக்கம் அளித்தது.

More News >>