லதா ரஜினிகாந்த் மறுத்தால் கடையை ஜப்தி செய்யலாம் - நீதிமன்றம் உத்தரவு

ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கடையை காலி செய்யாவிட்டால், லதா ரஜினிகாந்த் கடையை சென்னை மாநகராட்சி ஜப்தி செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா' தனியார் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. மாநகராட்சி உத்தரவை எதிர்த்து, லதா ரஜினிகாந்த் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இதற்கு, மாநகராட்சி அளித்த பதிலில், ”மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கடை வாடகை மாற்றியமைக்கப்படுவதாகவும், இதுவரை முறையாக செலுத்திவந்த லதா ரஜினிகாந்த் திடீரென எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லை என்றால் கடையை பொது ஏலத்தில் விட்டு கடையை திரும்பப் பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்தது.

பின்னர் இது குறித்து உத்தரவிட்டுள்ள நீதிபதி, கடை வாடகை உயர்த்தப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மாநகராட்சி வாடகையை ஏற்பதா வேண்டாமா என லதா ரஜினிகாந்த் முடிவு செய்துகொள்ளலாம்.

தவறும்பட்சத்தில் அந்த கடையை மாநகராட்சி ஏலத்தில் விடலாம். ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கடையை காலி செய்யாவிட்டால், காவல் துறை உதவியுடன் லதா ரஜினிகாந்த் கடையை சென்னை மாநகராட்சி காலி செய்யலாம்” என்றார்.

More News >>