சென்னையில் 471 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்.
சென்னை தலைமைச்செயலகத்தில்,155 கோடி ரூபாய் மதிப்பிலான 471 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புதிய பேருந்தில் ஏறி, அதில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டனர்.
471 பேருந்துகளில் 60 பேருந்துகளில் குளிர்சாதனம், படுக்கை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், தரமான வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். வசதி, செல்போன் செயலி மூலம் பஸ் வரும் நேரத்தை அறியும் வசதி, 2 அவசர கால வழிகள், சீட் சாய்வை 105 டிகிரியில் இருந்து 115 ஆக உயர்த்தியிருப்பது போன்றவை இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்திலேயே மாதவரத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தையும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சுமார் 95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பேருந்துநிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா, திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் பயன்பாட்டுக்காக, சாய்வு தள நடைபாதை, மின் துாக்கி, ஓய்வு அறை, மருத்துவ அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, உணவகம், ஏ.டி.எம், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, கோயம்பேட்டில் இருந்து, மாதவரம் மார்க்கத்தில், வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், இப்பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. இதனால், கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.