தாமிரபரணியில் புஷ்கர விழா- எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்று புகார்!

குரு பகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடைபெறும். ஒவ்வொரு வருடமும் ஒரு நதியில் புஷ்கர விழா கோலாகலமாக நடைபெறும். ஒரு நதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் புண்ணிய வைபவம் இது. 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா புஷ்கரம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

இந்த வருடம் விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணியில் மகா புஷ்கர விழா வரும் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தாமிரபரணி புஷ்கர விழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 64 தீர்த்தக் கட்டம் மற்றும் 149 படித்துறைகளில் ஆரத்தி உள்பட பல்வேறு பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புஷ்கர விழாவுக்காக மாநகரில் 600 போலீசார் மாவட்டத்தில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இருந்து 1500 போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தேவைப்பட்டால் இதர மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் நீராடும் பக்தர்களுக்கான கழிவறை உடைமாற்றும் அறை உள்பட அடிப்படை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு தாமிரபரணி புஷ்கர குழு ஒருங்கிணைப்பாளரும் பொதுமக்களும் கோரியுள்ளனர்.

More News >>