துணை வேந்தர்கள் நியமனம் யார் மீதும் குற்றச்சாட்டு கூறவில்லை! கவர்னர் பன்வாரிலால்
துணைவேந்தர்கள் நியமனம் குறித்து கல்வியாளர்கள் தெரிவித்த கருத்தையே தெரிவித்தேன் என்றும் யார் மீதும் குற்றச்சாட்டு கூறவில்லை என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கவர்னரின் பேச்சு தொடர்பாகவும், துணைவேந்தர் நியமன முறைகேடு புகார் தொடர்பாகவும் கவர்னர் மாளிகை நேற்று விளக்கம் அளித்துள்ளது.
அதில், என்னை அவ்வப்போது சந்திக்கும் கல்வியாளர்கள் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக கூறினார்கள். இதில் கோடி கணக்கில் பணம் கைமாறுவதாக கூறப்பட்டது ஆனால் அதை நான் நம்பவில்லை இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன் அதன் காரணமாக துணைவேந்தர் நியமனத்தில் மிகவும் கறாராக செயல்பட்டேன் இன்று வரை 9 துணை வேந்தர்களை நான் நியமித்துள்ளேன் எல்லோரையும் தகுதியின் அடிப்படையிலேயே நியமித்துள்ளேன்.
மேலும் நான் துணைவேந்தர்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை கல்வியாளர்கள் என்னிடம் கூறிய கருத்தை மட்டுமே கூறினேன், இதற்கு முன்பு எல்லாம் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களின் நிலை என்ன ஆனது என்று மக்களுக்கு தெரியும் அவர்களில் சிலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து இருக்கிறார்கள் 2 துணைவேந்தர் வீட்டில் ரெய்டு கூட நடத்தினார்கள். துணை வேந்தர் ஐகோர்ட்டால் பதவி நீக்கம் கூட செய்யப்பட்டார். ஆனால் 2018-க்கு பின் நேர்மையான நபர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். தற்போது கல்வி நிலையங்களில் திறமையான துணை வேந்தர்கள் இருக்கிறார்கள் என்று கவர்னர் அறிக்கையில் கூறியுள்ளார்.