தாமிரபரணி புஷ்கரம் விழா தொடர்பான வழக்கு- மனுதாரருக்கு அபராதம்
தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
தாமிரபரணி புஷ்கரம் திருவிழா நாளை தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராட உள்ளனர்.
இந்த விழாவின்போது கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடவுள் மறுப்பு இயக்கத்தினர் பிரச்சினை ஏற்படுத்தக் கூடும் என எந்த அடிப்படையில் மனுதாரர் கூறுகிறார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தகவல் வந்தது எனக் கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்த ஆதாரமும் இல்லாமல் மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.