அடிப்படை வசதிகள் இல்லாத்தால் திருவண்ணாமலை பள்ளிக்கு சீல்!
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் என்ற ஊரில் இயங்கி வந்த காந்தி இண்டர்நேசனல் மெட்ரிக் பள்ளிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சீல் வைத்தார்.
மங்கலம் என்ற ஊரில் காந்தி இண்டர்நேசனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வந்தது. இங்கு அடிப்படை வசதிகள் எதுவுமில்லை என்றும் சுகாதாரம் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் பள்ளி இயங்கி வருவதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு புகார் வந்தது. இதை அடுத்து கடந்த சனிக்கிழமை அன்று மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மட்டும் வகுப்புகள் நடத்த அனுமதிபெற்று விட்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்திற்கு அருகில் கிணறு ஒன்றுமூடப்படாமலும் இருந்துள்ளது. இதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி சீல் வைத்தார். இந்த பள்ளியில் படித்து வந்த 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என்றும், இதற்கான கடிதம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.