தாமிரபரணி மகா புஷ்கரம் விழா தொடங்கியது

144 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை தாமிரபரணியில் மகா புஷ்கர விழா தொடங்கியது.

நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள ஜடாயு படித்துறையில் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த விழா வருகிற 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்காக தாமிரபரணி நதிக்கரையில் 64 தீர்த்தக்கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

முக்கிய தீர்த்தக்கட்டங்களில் துறவியர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள், அரசியல் பிரமுகர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கு வசதியாக ஆழமான பகுதியில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக்கப் பட்டுள்ளது.

தாமிரபரணியின் மையப்பகுதியில் படகுகளில் மீட்பு படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வருகை காரணமாக நெல்லையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் ஆளுநர், பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.

More News >>