ஆஸ்திரேலியாவில் அசத்திய அஜித் மாணவர்கள்
அஜித் ஆலோசனையுடன் மாணவர்கள் தயாரித்த டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இதற்கு உதவியாக இருந்த நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித், சினிமாவுக்குப் பிறகு புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணா பல்கழைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குள் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது.
இதில், பல்வேறு குழுக்களுடன் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்ஷா என்ற ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது.
அது, தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டதுடன், 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. மேலும் இந்த ஆளில்லா விமானம் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால் இதை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் என அஜித் யோசனை கூறியதாக தகவல் வெளியானது.
இந்த சாதனையைத் தொடர்ந்து தக்ஷா குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருது வழங்கி கவுரவம் செய்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள டால்பியில் கடந்த 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில், உலகம் முழுவதிலுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் பங்கேற்றன. அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதில் அஜித் ஆலோசகராக இருந்த தக்ஷா குழு இரண்டாவதாக இடம்பிடித்தது. இதில் போட்டி என்னவென்றால் ரத்தமாதிரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துச்செல்ல வேண்டும்.
இந்தப் போட்டியில் தக்ஷா குழு வடிவமைத்திருந்த விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஹ் யூஏஎஸ் என்ற ஆளில்லா விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.
விமானத்தின் பறக்கும் திறனைப் பொறுத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், மோனாஹ் விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றது.
தக்ஷா குழு சற்று குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் 116.55 புள்ளிகளுடன் மோனாஹ் விமானம் முதலிடத்தையும், 115.70 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றது.
இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.