ஆந்திரா- ஓடிசா இடையே கரையை கடந்தது டிட்லி புயல்
ஆந்திரா- ஓடிசா இடையே கரையை கடந்த டிட்லி புயல் காரணமாக அப்பகுதியில் கனமழை பெய்கிறது.
ஒடிசா மாநிலம் கோபால்பூர் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் இடையே இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், ஆந்திரா மாநிலம் கலிங்கப்பட்டினம், சிக்காகுளம் உள்ளிட்ட பகுதியில் மணிக்கு 102 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. கனமழை வெளுத்து வாங்குகிறது.
இதனிடையே, மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, காற்றும் பெரிய அளவில் வீசும். இந்த நிலை 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 12,13 தேதிகளில் கொல்கத்தா, ஹவுராவில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, ஒடிசா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.