டயானா விருதினை வென்ற தங்கமீன்கள் சாதனா!

தங்கமீன்கள் படத்தில் செல்லமாவாக நடித்த சாதானாவிற்கு டயானா விருது கிடைத்துள்ளது.

தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்ற தங்கமீன்கள் படத்தில் செல்லமாவாகவும், மம்மூட்டியின் பேரன்பு படத்தில் பாப்பாவாகவும் நடித்துள்ள சாதனாவிற்கு சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது கிடைத்துள்ளது. இதனை இயக்குனர் ராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து சாதனாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ராம் இயக்கத்தில் தங்க மீன்கள் படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில், சுட்டித் தனம் நிறைந்த பள்ளிக் குழந்தையாக சாதனா அறிமுகமானர். சாதனாவின் சுட்டித் தனம் நிறைந்த நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

தற்போது, இளம் பெண்ணாக மாறியுள்ள சாதனா, மீண்டும் ராம் இயக்கத்தில், பேரன்பு என்ற படத்தில் நடித்துள்ளார். மம்முக்கா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், மாற்றுத் திறனாளி குழந்தை பாப்பாவாக சாதனா நடித்துள்ளார். இந்த படம் சர்வதேச அரங்கில் பல விருதுகளை வென்றபோதும், கோலிவுட்டில் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில், துபாயில் வசித்து வரும் சாதனா, தனது பள்ளியின் மூலம் பல சமூக செயல்பாடுகளை செய்து வருகிறார். அவரது சமூக மேம்பாட்டு பணிகளை பாராட்டி இங்கிலாந்தில் வழங்கப்படும் சர்வதேச விருதான டயானா விருது வழங்கப்பட்டுள்ளது.

விரைவில், பேரன்பு தரும் பாப்பாவை காண தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகையாக மட்டுமல்லாமல் நல்ல மனிதியாக சாதனா இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள்!

More News >>