சட்டவிரோதமாக இயங்கிய 6 சாய ஆலைகள் இடித்து அகற்றம்-சேலத்தில்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் சாயக் கழிவுகள் கலந்து நுரை பொங்கிய விவகாரத்தில், சேலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 6 சாய ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன.
சேலத்தில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதை சாதகமாக்கிக் கொண்டு சேலத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாய ஆலைகள் கழிவுகளை ஆற்று நீரில் கலந்து விட்டன. இதனால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் மலை போல் நுரை பொங்கியது.
மலை போல் நுரை எழுந்துள்ளதால் மதியம்பட்டி மல்லசமுத்திரம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலையை முழுவதும் நுரை ஆக்கிரமித்துள்ளதால் அன்றாட பணிகளுக்குச் செல்வோர் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருமணிமுத்தாற்றின் நீரால் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்த நிலையில் தற்போது இந்த நீரை எப்படி பயன்படுத்த முடியும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் நுரையால் துர்நாற்றம் வீசுவதாகவும் குடிநீர் வளம், விளை நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.
இதை கவனத்தில் கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கலரம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத சாய ஆலைகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டது. அதில் கலரம்பட்டி பகுதியில் உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான குமார் சில்க் டையிங், செங்கோடன் என்பவருக்கு சொந்தமான 3 ஆலைகள், ஜி.கே.கரட்டூர் என்ற இடத்தில் இயங்கி வந்த பிரபு கலர்ஸ் மற்றும் காந்தி டையிங் ஆகிய 6 ஆலைகள், சட்டவிரோதமாக இயங்கி வருவதுடன், சாயக் கழிவுகளை ஆற்றில் கலந்ததையும் கண்டுபிடித்தனர் இதை அடுத்து இந்த ஆறு ஆலைகளையும் இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர் இதன்படி இன்று ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன. ஆலைகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.