ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்க தமிழக அரசு முடிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது பயணத்திற்காக நவீன ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கினார். இந்த ஹெலிகாப்டர் கடந்த 2006ம் ஆண்டு வாங்கப்பட்டது.

பெல் 412 இ.பி ரக ஹெலிகாப்டராக இது 2 இஞ்ஜின்களை கொண்டதாகும். 11 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் தான் ஜெயலலிதா பலமுறை பயணம் செய்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகும், இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் வரையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதன் பிறகு, ஹெலிகாப்டர் பழுதடைந்தது. இதை பழுது பார்க்க அதிக செலவாகும் என்பதால் அதனை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டரை விற்பனை செய்வதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால், ஹெலிகாப்டர் விற்பனை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்காக தயாராகவுள்ள ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>