சினிமா உலகம் இவ்வளவு மோசமா? படையெடுக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்குமா?

சினிமா உலகம் எவ்வளவு மோசம் என்பது தற்போது வெட்டவெளிச்சம் ஆகி வருகின்றது. சில கருப்பு ஆடுகளா? அல்லது சிலர் மட்டுமே வெள்ளை ஆடுகளா என்பது தான் சினிமாவின் வரம் மற்றும் சாபமாக அமைந்துள்ளது.

ஹாலிவுட் ஹார்வே வெயின்ஸ்டீன் தொடங்கி, பாலிவுட்டில் நானா படேகர், குயின் பட இயக்குநர் என பெரிய பட்டியலே நீண்டது. கோலிவுட் மற்றும் டோலிவுட் பாலியல் புகார்களை ஸ்ரீரெட்டி கூறிய போது கண்டு கொள்ளாத இந்த சமூகம், இன்று சின்மயி, சாண்ட்ரா என பலரும் வெளிப்படையாக கூறுவதும் அதற்கு, சமந்தா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பெரிய நடிகைகள் ஆதரவு அளிப்பதும் என தற்போது, சினிமாவில் உள்ள வன்மங்கள் மற்றும் பாலியல் தொல்லைகள் வெளியே நாற்றமெடுக்க தொடங்கி விட்டன.

இந்நிலையில், படுக்கைக்கு போக மறுத்ததால், 3 பட வாய்ப்புகளை இழந்தேன் என காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள நாயகி அதிதி ராவும் இந்த மீடூ இயக்கத்தில், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.

அந்த மூன்று படங்களின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் யார் என்று தெரிவிக்காமல், சற்று மறைத்தே காய் நகர்த்தியுள்ளார் அதிதி ராவ்.

தனக்கு காசை விட மானம் மற்றும் கெளரவம் தான் முக்கியம் என பெற்றோர்கள் சொல்லி வளர்த்ததால், தான் பலரது பாலியல் இச்சைக்கு ஆளாமல் இருக்கிறேன் என வாய்திறந்துள்ளார் அதிதி ராவ்.

அப்படி பார்த்தால், இவருக்கு பதிலாக அந்த படங்களில் கமீட் ஆன மற்ற நடிகைகள் பாலியல் இச்சைகளுக்கு அடிபணிந்து வாய்ப்பை பெற்றனரா என்ற கேள்வி எழுகிறது.

கள்ள உறவே தப்பில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நடிகைகளை கள்ளத்தனமாக தொடுவதும், கட்டி அணைப்பதும் என பாலியல் சீண்டல்கள் புரியும் பிரபலங்கள் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் கருப்பு ஆடுகளை எப்படி இனம் கண்டறிவது.

நடிகைகள் ஏன் இதற்கு ஒத்துழைக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது. பட வாய்ப்பு உச்சத்தில் இருக்கும் போது வாய்திறக்காமல், பட வாய்ப்புகள் குறைவதாலோ அல்லது மூன்றாம் தர நடிகை அந்தஸ்து கொடுப்பதாலே இவர்கள் தற்போது ‘நானும் பாதிக்கப்பட்டேன்’ எனும் மீடூவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது.

காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை கையாள்வதும் தவறு. அதே போன்று, காமவெறியால், தங்களுக்கு இருக்கும் சமூக அந்தஸ்து மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, இளம் பெண்களை பாலியல் இச்சைக்கு அழைப்பதும் மிகப் பெரிய தவறு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமாவில் நடிக்கும் பெண்கள் வாய்ப்புக்காக நிச்சயம் படுக்கைக்கு செல்வதை மறுக்க வேண்டும். அப்படி அழைக்கும் நபர்களை அப்போதே முகத்திரையை கிழிக்கும் அளவுக்கு செய்யவேண்டும்.

பாலியல் வழக்குகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் போடும் சினிமா துறையில் இதுபற்றி சொல்லவா வேண்டும். இப்படி ஆடை அணியாதீர்கள் என்றால், அது உங்கள் பார்வையில் தான் உள்ளது என பொங்கும் பெண் போராளிகள், யாரை பார்த்தாலும், கட்டியணைப்பதை சாதாரணமாக கருதும் பெண் பிரபலங்கள், பாலியல் தொல்லை குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசும்போதும், அவர்களின் நிலையை கூட கேட்காமல் செல்வது என்ன டிசைனோ என்பது போல் தான் தோன்றுகிறது.

இன்னும் இந்த மீடூ இயக்கத்தில், எத்தனை பெரிய தலைகள் உருளப்போகிறது என்பதற்கு வைரமுத்துவின் வைர வரிகளான காலம் தான் பதில் சொல்லும் என்பதையே சொல்லி முடிக்கிறோம்.

 

More News >>