யூத் ஒலிம்பிக்ஸ்: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்!

கடந்த 6 ம் தேதி முதல் யூத் ஒலிம்பிக்ஸ் எனும் 'இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவிலுள்ள பியோனஸ் ஏர்ஸ் நகரில், நடைபெற்றுவருகிறது. மொத்தம் 206 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன.

3வது வருடமாக நடைபெறும் இந்த இளையோர் ஒலிம்பிக் போட்டியில், ஏற்கெனவே கடந்த 8ம் தேதி பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா தங்கப்பதக்கம் வென்றார். 9ம் தேதி, பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சௌரவப் சௌதரி தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றுள்ளார். 244.2 புள்ளிகளில் இந்த இலக்கை எட்டியுள்ளார் சௌரவப். இவருக்கு அடுத்த நிலையில் தென்கொரியாவின் வீரரான சங் யுங்கோ 236.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். 3 -வது இடத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் சொலாரி ஜேசன் 215.6 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 

16 வயதாகும் சௌரவப் சௌதரி உத்திரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர், 2018 ஆசிய விளையாட்டுகளில் 10 மீ ஏர் பிஸ்டலில் தங்க பதக்கம் மற்றும் ஜெர்மனியிலுள்ள சுஹில் ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பையில் ஒரு சாதனை படைத்தார். கொரிய சாங்குவானில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் ஜூனியர் மென் 10 மீ ஏர் பிஸ்டலில் தங்கம் வென்றுள்ளார் இந்த இளம் வீரர்.

இளம் இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாடிவரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இன்னும் பல வெற்றிகள் இடம்பெறும் என்று உறுதியாக நம்பலாம்!

More News >>