காதலிக்காக களவு செய்த கூகுள் எஞ்ஜினியர் கைது!

சிநேகிதியின் செலவுக்காக பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிய கூகுள் நிறுவன பொறியாளர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 11ம் தேதி, ஐபிஎம் நிறுவனம், ஊடக நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பன்னாட்டு நிறுவனங்களின் முதுநிலை நிர்வாகிகளுக்கென கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடந்த இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட தேவ்யானி ஜெயின் என்பவர் தமது கைப்பையிலிருந்த பத்தாயிரம் ரூபாயை காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட புதுடெல்லி காவல்துறையினர், ஹோட்டவ் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் தகவல்களையும் போலீஸார் பெற்று விசாரித்தனர். அதன் அடிப்படையில் ஹோட்டலுக்கு வந்த நபர் ஒருவரைக் குறித்து சந்தேகம் எழுந்தது. வாடகை கார் ஒன்றில் அந்த நபர் வந்துள்ளதை அறிந்த காவல்துறையினர், அந்நிறுவனத்தின் மூலம் அவரின் மொபைல் எண்ணை பெற்றனர். ஆனால், அந்த கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்த விசாரணையில் அவரது புதிய தொடர்பு எண் கிடைக்கப்பெற்றது. அதன் மூலம் கர்வித் சஹானி (வயது 24) என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த எஞ்ஜினியரான இவர், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

காவல்துறையினரின் விசாரணையின்போது, தமது சிநேகிதிக்காக செலவழிக்க தம்மிடம் பணம் இல்லாததால் திருடியதாக ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து மூவாயிரம் ரூபாய் பணத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர் என்று புதுடெல்லி காவல் துணை ஆணையர் மதுர் வர்மா தெரிவித்துள்ளார்.

More News >>