ஏர்ஏசியா இந்தியா விமான நிறுவனத்தின் சிஇஓ ஆகிறார் சுனில் பாஸ்கரன்!

டாட்டா குழுமம், மலேசிய ஏர்ஏசியா பெர்ஹாட் இணைந்து நடத்தும் ஏர்ஏசியா இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக சுனில் பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ஐஐடியில் 1985ம் ஆண்டு பி.டெக். பட்டம் பெற்றுள்ள பாஸ்கரன், கொல்கத்தா ஐஐஎம்மில் நிர்வாக மேலாண்மை பட்டமேற்படிப்பு முடித்து 1987ம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இணைந்தவர். 2000ம் ஆண்டில் ஃபிரான்ஸில் பொது மேலாண்மை குறித்து மேற்படிப்பு படித்துள்ளார். தற்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கார்பரேட் என்னும் பெருநிறுவன சேவை பிரிவின் துணை தலைவராக சுனில் பாஸ்கரன் செயலாற்றுகிறார். ஜாம்ஷெட்பூர் நகர சேவை நிறுவனம் (JUSCO) மற்றும் ஜாம்ஷெட்பூர் கால்பந்து கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

ஏர்ஏசியா இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அமர் அப்ரோல், தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகிய பிறகு கடந்த ஜூன் மாதம் முதல் அப்பதவி காலியாகவே இருந்து வந்தது.

ஏர்ஏசியா நிறுவனம் கடினமான பாதையின் வழியாக சென்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் நிலைமையை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கையில் , டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன், பாஸ்கரனை தேர்வு செய்துள்ளார்."இந்திய விமான போக்குவரத்து துறை வேகமாக வளர்ந்து வரும் நாட்களில், தமது பரந்த அனுபவத்தின் மூலம் அனைத்து பங்குதாரர்களின் திருப்திக்கேற்ப திறமையுடன் சுனில் பாஸ்கரன் செயல்படுவார் என்று நம்புகிறோம். அவர் ஏர்ஏசியா இந்தியா நிறுவனத்திற்கு மதிப்புமிக்க சொத்து ஆவார்," என்று ஏர்ஏசியா இந்தியா நிறுவனத்தின் தலைவர் எஸ்.ராமதுரை தெரிவித்துள்ளார். நவம்பர் 15ம் தேதி, சுனில் பாஸ்கரன் இப்புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

More News >>