சிகிச்சையளித்தாரா செக்யூரிட்டி? விழுப்புரம் அரசு மருத்துவமனையில் விசாரணை
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு காயத்துடன் வந்தவருக்கு தனியார் பாதுகாவல் நிறுவன ஊழியர் சிகிச்சை அளித்தார் என்ற தகவல் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் மருத்துவசேவை பணிகள் இணை இயக்குநர் விளக்கம் கேட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை முதல், விழுப்புரம் பகுதியை சுற்றியுள்ளவர்களின் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக கணக்குகளில் வீடியோ ஒன்று வலம் வருகிறது. தனியார் பாதுகாவலருக்கான சீருடையில் இருக்கும் ஒருவர், காலில் காயம் பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி அந்த ஒளிப்பதிவில் உள்ளது. 'விழுப்புரம் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி சிகிச்சையளிக்கும் காட்சி' என்று அப்பதிவுக்கு விளக்கக் குறிப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
இது பற்றி நடந்ததாக கூறப்படுவதாவது:
விழுப்புரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 35). திங்கள்கிழமை அதிகாலை ஆட்டோ ரிக் ஷாவின் புகைபோக்கியில் இவரது கால் பட்டுவிட்டது. காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு பாதுகாவல் பணியில் தனியார் பாதுகாவல் நிறுவனம் ஒன்றின் ஊழியர் கார்த்திக் என்பவர் பணியிலிருந்துள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவினுள் நோயாளிகளுடன் வந்தவர்கள் கூட்டமாக சென்றதால், அவர்களை வெளியேற்றுவதற்காக தான் உள்ளே சென்றதாகவும், காலில் காயம் ஏற்பட்டதால் வெளியேறிக்கொண்டிருந்த இரத்தத்தை பெண் ஒருவர் தமது சேலையால் துடைத்ததாகவும், அப்படி செய்வது காயத்தை பாதிக்கும் என்று கூறி, தாம் இரத்தத்தை துடைப்பதற்காக பஞ்சினை அளித்ததாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதிக இரத்தத்தைப் பார்த்ததால் தனக்கு மயக்கம் வருவதுபோல் இருப்பதாக தெரிவித்த அப்பெண், இரத்தத்தை துடைப்பதற்கு உதவும்படி கேட்டுக்கொண்டதாலேயே தாம் ஜீவாவின் காலிலிருந்து வெளியேறிய இரத்தத்தை துடைத்ததாகவும், அதை வீடியோ எடுத்த யாரோ ஒருவர் தவறான தகவலோடு அதை பரப்பி வருவதாகவும் கார்த்திக் கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனைக்கு பாதுகாவல் வழங்கி வரும் தனியார் நிறுவனம் குறிப்பிட்ட அந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. புதன்கிழமையன்று சுகாதார சேவை பணிகள் இணை இயக்குநர் சுந்தர்ராஜன், விழுப்புரம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சாந்தியிடம் இச்சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளார்.
"திங்கள் அன்று காலை, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவ பணியாளர்கள், தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர் உள்பட ஐந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். அப்பிரிவில் கூடிய மக்களை வெளியேற்றும்படி உள்ளே வந்த தனியார் பாதுகாவலர், நோயாளியின் காயத்திலிருந்து வெளியேறிய இரத்தத்தை துடைத்துள்ளார். இது குறித்து அப்போது பணியிலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்," என்று விழுப்புரம் மருத்துவ அதிகாரி சாந்தி தெரிவித்துள்ளார்.