நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமின் மனு தாக்கல்
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கில், நக்கீரன் பத்திரிகை ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து நக்கீரன் பத்திரிகையில் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநர் அலுவலகம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல் துறையினர், கடந்த 8ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை கைது செய்தனர்.
எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து, நக்கீரன் கோபால் அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே, நக்கீரன் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.